Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை. மேலும், 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 7வது இடத்திலேயே நீடிக்கிறது இந்தியா. 20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது சீனா. 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை கொரியாவும், 2 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் ஜப்பானும் இடம் பெற்றிருக்கின்றன.
குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிகட் ஸரீன்
இன்றைய நாளில் முன்னதாக 50-54 கிலோ எடைப்பிரிவில், ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிலினாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார் இந்திய குத்துச்சண்டை வீராங்கணை ப்ரீத்தி. அவரைத் தொடர்ந்து, 45-50 கிலோ எடைப்பிரிவில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வியட்நாமை சேர்ந்த தி தாமை தோற்கடித்து ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் இந்திய வீராங்கணை நிகட் ஸரீன். வாள்வீச்சு: பதக்க வாய்ப்பை தவறவிட்ட இந்தியா வாள்வீச்சு விளையாட்டின் எபீ பிரிவில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கணை தனிக்ஷா காத்ரி, காலிறுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மான் வை விவியனிடம் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார்.
சதுரங்கம்: ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீராங்கணைகள்
இன்றைய நாளில், சதுரங்க விளையாட்டில் முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அர்ஜூன் எரிகிசை, விதித் குஜராத்தி, கோனேறு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவள்ளி ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட அர்ஜூன் எரிகிசை போட்டியை டிரா செய்த நிலையில், விதித் குஜராத்தி தோல்வியைத் தழுவியிருக்கிறார். பெண்கள் பிரிவில் போட்டியிட்ட கோனேறு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவள்ளி ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றையும் வெற்றி பெற்று அசத்தியிருக்கின்றனர். நாளை சதுரங்க விளையாட்டின் தனிநபர் பிரிவில் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகள் நடைபெறவிருக்கின்றன.
கால்பந்து: டிரா செய்த இந்திய ஆண்கள் கால்பந்து அணி
இன்றைய கால்பந்து விளையாட்டின் குழு சுற்று போட்டியில் மியான்மர் அணியை எதிர்கொண்டது இந்திய கால்பந்து அணி. இரு அணிகளுமே சமபலத்தை வெளிப்படுத்திய நிலையில், போட்டி 1-1 என்ற டிராவானது. இந்த டிராவை தொடர்ந்து குழுவில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து, ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது இந்தியா. நீச்சல்: பதக்கத்தை இழந்தது இந்தியா இன்றைய நாளின் தொடக்கத்தில் நீச்சல் விளையாட்டில், ஆண்கள் 100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தகுதிச் சுற்றின் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார் இந்திய வீரர் ஸ்ரீஹகி நடராஜன். அதனைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6வது இடம்பிடித்து பதக்கத்தை தவறவிட்டிருக்கிறார்.
டேபிள் டென்னிஸ்: வெளியேறிய ஆண்கள் அணி
கடந்தாண்டு நடைபெற்ற காமத்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களைக் குவித்தது இந்தியா. இன்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக ஆடிய இந்திய பெண்கள் அணியானது தாய்லாந்துடன் 2-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய ஆண்கள் அணியானது மிக மோசமாக கொரியாவிடம் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறி அதிர்ச்சியளித்திருக்கிறது. ஆண்கள் அணியில் போட்டியிட்ட ஹர்மீத் ரஜூல், சத்தியன் ஞானசேகரன் மற்றும் சரத் கமல் ஆகிய மூவருமே கொரிய வீரர்களிடம் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.