
ஓவல் மைதானத்தில் இது சகஜம் தான்; முதல் இன்னிங்ஸில் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸில் வென்ற அணிகளின் வரலாறு
செய்தி முன்னோட்டம்
ஓவலில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக, போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய பிறகு இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஆரம்பத்தில் உறுதியாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. இருப்பினும், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமான மறுபிரவேசத்தை மேற்கொண்டனர். பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்குள் சரிவை சந்தித்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸில் மீண்ட இந்தியா
முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் மீண்ட இந்திய கிரிக்கெட் அணி 396 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி அணியில் ஸ்கோரை வலுப்படுத்தினர். இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 374 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் நிதானமாக ஆடினால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றியைப் பெற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஓவல் மைதானத்த்தில் முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்து இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்து வெற்றி பெற்ற வரலாறு ஏற்கனவே நிறைய உள்ளதால், இந்தியா மீண்டும் ஒருமுறை அந்த வரலாற்றைப் படைக்கும் முனைப்புடன் உள்ளது.
முந்தைய வரலாறு
ஓவல் மைதானத்தில் முந்தைய நிகழ்வுகள்
ஓவல் மைதானத்தில் பல வெளிநாட்டு தரும் அணிகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற பின்னடைவை முறியடித்து வெற்றி பெற்றுள்ளன. 1971 ஆம் ஆண்டு இந்தியாவும் ஏற்கனவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. அதில் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் 173 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. 2024 செப்டம்பரில் இலங்கை அணி , 1963 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ், 1882 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்த சாதனைகளை படைத்துள்ளது. மேலும், சமீபத்தில், 2021 ஆம் ஆண்டு ஓவலில் நடந்த போட்டியில் இந்தியா 99 ரன்கள் பின்தங்கிய நிலையை 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
சேஸிங்
ஓவலில் சேஸிங் புள்ளி விபரங்கள்
ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் சேஸிங் செய்வது வரலாற்று ரீதியாக கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் பல மறக்கமுடியாத முயற்சிகள் தனித்து நிற்கின்றன. 1902இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 263 ரன்களை துரத்தியதே இந்த மைதானத்தில் சேஸிங்கில் பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். அதைத் தொடர்ந்து 1963இல் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்களை சேஸ் செய்தது. இந்தியாவின் ஒரே வெற்றிகரமான சேஸிங் 1971இல் அவர்களின் புகழ்பெற்ற வெற்றியில் வந்தது. இந்நிலையில், தற்போதைய போட்டியில் இலக்கு 350 ரன்களுக்கும் மேல் இருப்பதால் வரலாற்று ரீதியாக இங்கிலாந்து அணிக்கு இலக்கை எட்டுவது சவால் நிறைந்ததாக இருக்கிறது. இந்தியா இதில் வென்று தொடரை 2-2 என சமன் செய்யும் முனைப்புடன் உள்ளது.