IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : 76 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 76 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். எனினும், ஆஸ்திரேலியாவின் சுழலை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். மேத்யூ குஹ்னேமன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாளில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் கோட்டை விட்ட இந்தியா
முதல் இன்னிங்சில் அடைந்த வீழ்ச்சியை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சரிக்கட்டும் என நினைத்த நிலையில், இரண்டாவது நாள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் புஜாரா மட்டும் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் அதிகபட்சமான 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் வெறும் 76 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் சுழல் மேஜிக் நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என்பதால், அனைவரின் பார்வையும் அஸ்வின் மற்றும் ஜடேஜா மீது உள்ளது.