டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா
விராட் கோலியைத் தொடர்ந்து, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பார்படாஸின் கென்சிங்டன் ஓவலில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 பட்டத்தை வென்றது. இதனையடுத்து, இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. வரலாற்று வெற்றி கிடைத்த சில நிமிடங்களிலேயே கோலி தனது ஓய்வை அறிவித்திருந்தாலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போட்டியின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வை அறிவித்தார். எனினும், ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கு டி20 பட்டம் வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 மோதலில் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசிய ரோஹித், தங்களது இந்த வெற்றி பல ஆண்டுகள் மக்களின் நினைவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். "இது எனது கடைசி ஆட்டமாகும். விடைபெறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை. நான் இந்த கோப்பையை வெல்ல மிகவும் ஆசைப்பட்டேன். என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்வது மிகவும் கடினம்," என்று ரோஹித் கூறியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.