
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த சிறப்பான வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம், இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் (PCT) 55.55 ஆக உயர்ந்துள்ளது. இது, முன்பு சந்தித்த இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு டிராவுக்குப் பிறகு, அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. போட்டியின் அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. முதலில் பந்துவீசிய இந்தியா, வெஸ்ட் இன்டீஸை 162 ரன்களுக்கு சுருட்டியது.
பேட்டிங் அபாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் அபாரம்
பதிலுக்கு, இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதில் கே.எல்.ராகுல் (100), துருவ் ஜூரேல் (125), மற்றும் ரவீந்திர ஜடேஜா (104 நாட் அவுட்) ஆகியோர் சதம் அடித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, வெறும் 146 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா மூன்று நாட்களுக்குள்ளாகவே வெற்றியை வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னும் ஒரு வெற்றியைக் கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.