ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சில் திணறிய வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் ஜாகிர் அலி அதிகபட்சமாக 24 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹுசைன் இமோன் 23 ரன்களும் எடுத்தனர்.
India beats Bangladesh with 9 wickets in semi final
இந்திய அணியில் திலக் வர்மா அரைசதம்
97 ரன்கள் எனும் எளிய இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், திலக் வர்மா 55 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அக்டோபர் 7 ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில், இந்திய அணி பங்கேற்க உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.