ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 71 பதக்கங்களைக் குவித்து இந்தியா சாதனை
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதினோறாவது நாளான இன்று, இரண்டு விளையாட்டுக்களில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இந்த இரண்டு பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக இந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலேயே அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. தற்போது அதனை முறியடித்து 71 பதக்கங்களை வென்றிருக்கிறது. இன்னும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், பல்வேறு போட்டிகளில் இறுதிச்சுற்றை அடைந்து, பல போட்டிகளில் பதக்கத்தை உறுதி செய்துமிருக்கிறது இந்தியா.
இன்றைய பதக்கங்கள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (அக்டோபர் 4) அதிகாலை தொடங்கிய 35கிமீ கலப்பு இரட்டையர் அதிவேக நடைப்போட்டியில் இந்தியாவின் ராம் பாபு மற்றும் மஞ்சு ராணி இணையானது வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது. அதேபோல், வில்வித்தை விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட கொரிய வீரர்களை வீழ்த்தி இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜாஸ் பிரவீன் இணை. வில்வித்தை ஆண்கள் தனிநபர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் மற்றும் அபிஷேக் வெர்மா ஆகிய இருவருமே தகுதி பெற்றிருக்கின்றனர். இறுதிச்சுற்றில் இருவருமே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவிற்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.