நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, 3-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் அரங்கில் இன்று(டிசம்பர் 1) நடைபெற்ற நான்காவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களையும் எடுத்த பின் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு, களமிறங்கிய பேட்டர்களில் ஒருவரான ரிங்கு சிங், நின்று விளையாடி 29 பந்துகளில் 46 ரன்களை எடுத்து குவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை
இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து 14வது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்று எடுத்த ரன்களின் மூலம், ருதுராஜ் கெய்க்வாட் 4,000 டி20 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெயரும் ருதுராஜ் கெய்க்வாட்க்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் பந்து வீசிய பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்பும் தன்வீர் சங்காவும் தலா 2 விக்கெட்டுகளையும் தட்டி தூக்கினர். இந்நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது ஆஸ்திரேலியா
175 ரன்கள் எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 31 ரன்களும், ஜோஷ் பிலிப் 8 ரன்களும் எடுத்தனர். அதற்கு பின், ஆஸ்திரேலிய அணியின் சார்பாக பேட்டிங் செய்த பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட் ஆகியோர் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். மேத்யூ ஷார்ட் 22 ரன்களிலும், மேத்யூ வேட் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் தரப்பில் பந்து வீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் தட்டி தூக்கினர். இந்நிலையில், 20 ஓவரின் முடிவில் 154/7 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய அணி, 20 ரன்கள் வித்த்யாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது.
டி20 போட்டிகளில் 50 கேட்சுகளை பிடித்து மேத்யூ வேட் சாதனை
டி20 போட்டிகளில் 50 கேட்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை மேத்யூ வேட் பெற்றுள்ளார், இதுவரை, டி20 போட்டிகளில் மேத்யூ வேட் 56 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில், 50 கேட்சுகளும் 6 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். அலெக்ஸ் கேரி மற்றும் ஹாடின் ஆகியோர் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கீப்பர்களாக தலா 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் டி20 போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட கேட்சுகளை கைப்பற்றிய ஐந்தாவது வீரர் என்ற பெயரையும் மேத்யூ வேட் பெற்றுள்ளார். 76 -குயின்டன் டி காக்(SA), 59-ஜோஸ் பட்லர்(ENG), 57-MS தோனி(IND), மற்றும் 51 -இர்பான் கரீம்(KEN) ஆகியோர் முதல் 4 இடத்தில் இருக்கும் சிறந்த டி20 விக்கெட் கீப்பர்கள் ஆவர்.