
மொஹ்சின் நக்வி கோப்பை கொடுக்கலான என்ன! போட்டோஷாப் கோப்பையுடன் புகைப்படங்களை பதிவிட்ட இந்திய வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றபோது, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றிய பின்னர், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட இந்திய அணியினர், நக்வியிடம் இருந்து கோப்பையையும், வெற்றியாளர்களுக்கான பதக்கங்களையும் பெற மறுத்துவிட்டனர்.
கொண்டாட்டம்
கோப்பை இல்லாமல் கொண்டாட்டம்
இதனால், நக்வி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு, வெற்றிக்கான வழக்கமான சின்னங்கள் இல்லாமல், வெற்றி மேடையில் கோப்பையே இன்றி இந்திய அணி தனித்து நின்று கொண்டாடியது. பிசிசிஐயின் செயலாளர் தேபாஜித் சைகியா, இந்திய வீரர்கள் கோப்பையை ஏற்க மறுத்ததால், மொஹ்சின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்குச் சென்றுவிட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.
சமூக ஊடகம்
வீரர்களின் சமூக ஊடகக் கொண்டாட்டம்
இந்தச் சம்பவம் தங்களின் கொண்டாட்டத்தைத் தடுக்க அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்த இந்திய வீரர்கள், சமூக ஊடகங்களில் நக்வியின் செயலைக் கேலி செய்தனர். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் கில் உள்ளிட்டோர் தாங்கள் போஸ் கொடுத்திருந்த படங்களை வெளியிட்டு, அதில் ட்ரோஃபி எமோஜியைச் சேர்த்து ஃபோட்டோஷாப் செய்து வெளியிட்டனர். சூர்யகுமார் யாதவ், "ஆட்டம் முடிந்த பிறகு, சாம்பியன்கள் மட்டுமே நினைவில் இருப்பார்கள். ஒரு கோப்பையின் படம் அல்ல." என்று பதிவிட்டு தனது எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்தார். மேலும், "ஒரு சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்படுவது இதுவே எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் முறை" என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.