பாகிஸ்தானை 93 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா; ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் மகளிர் அணி அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தனது இரண்டாவது லீக் போட்டியில், இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் ஏ அணியை மிக மோசமாக வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தனர்.
ஸ்பின்னர்கள்
பாகிஸ்தானை சுருட்டிய இந்திய ஸ்பின்னர்கள்
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணியின் கேப்டன் ராதா யாதவ், பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ராதா யாதவ் 3 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்குத் துணையாக பிரேமா ராவத் 2 விக்கெட்டுகளையும், மின்னு மணி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் நெருக்கடியைத் தாங்க முடியாமல், பாகிஸ்தான் ஏ அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தினேஷ் விருந்தா
தினேஷ் விருந்தாவின் அதிரடி பேட்டிங்
94 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை ஹுமைரா காசி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இருப்பினும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த தினேஷ் விருந்தா மற்றும் அனுஷ்கா சர்மா கூட்டணி பாகிஸ்தானின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. தினேஷ் விருந்தா வெறும் 29 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரும் அனுஷ்கா சர்மாவும் (24 ரன்கள்) இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் சேர்த்தனர். இதுவே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் தேஜல் ஹசாப்னிஸ் (12* ரன்கள்) அதிரடியாக ஆட, இந்திய அணி மிக எளிதாக இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.