INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா!
ஆசிய கோப்பைத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (செப்டம்பர் 4) இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நேபாள கிரிக்கெட் அணி 48.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நேபாள அணியின் இன்னிங்ஸின் போதே, மழையால் ஒரு முறை போட்டி நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்கஸில் நேபாள அணியின் சார்பில் ஆசிஃப் ஷேக் மட்டுமே அரைசதம் கடந்திருந்தார். இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். 231 என்ற இலக்கை சேஸ் செய்ய இரண்டாவது பேட்டிங் செய்யக் களமிறங்கியது இந்திய அணி.
மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் குறைப்பு:
இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணி சில ஓவர்கள் ஆடியிருக்கும் போதே மீண்டும் மழை குறுக்கிட்டுப் போட்டி நிறுத்தப்பட்டது. இரண்டாவது முறை சற்றுக் கூடுதலான நேரம் மழை பெய்ததால், போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. DLS முறைப்படி 23 ஓவர்களில் இந்தியாவிற்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது பேட்டரின் தேவையின்றி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் மற்றும் கில் ஆகிய இருவருமே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். போட்டியின் முடிவில் ரோகித் ஷர்மா 74 ரன்களையும், கில் 67 ரன்களையும் குவித்தனர். நேபாள அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா.