IND vs SL : இலங்கை அபார பந்துவீச்சு; 213 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா முதல் இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் அரைசதம் கடந்து நல்ல தொடக்கத்தை அமைத்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஜோடி 80 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 19 ரன்களில் அவுட்டானார். ரோஹித் ஷர்மா 53 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோலி வந்தவேகத்தில் 3 ரன்களுடன் வெளியேறினார்.
துனித் வெல்லலகே, சரித் அசலங்க பந்துவீச்சு அபாரம்
நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் முறையே 39 மற்றும் 33 ரன்கள் எடுத்தனர். எனினும், அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், அக்சர் படேல் (26) போராடி இந்திய கிரிக்கெட் அணியை மீட்டார். 47 ஓவர்கள் முடிந்தபோது இடையில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டு மீண்டும் தொடங்கிய நிலையில், இந்திய அணி இறுதியில் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்க 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 214 ரன்கள் எனும் இலக்குடன், இலங்கை அணி களமிறங்க உள்ளது.
இந்த காலவரிசையைப் பகிரவும்