ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் ஆப் பவர்பிளே; ஷாஹீன் அப்ரிடியின் அசத்தல் ரெகார்ட்
சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடந்த 2023 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலியை அடுத்தடுத்து அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களில் இருவரான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை எளிதாக போல்டாக்கி அவுட்டாக்கியதன் மூலம், இந்த இருவரையும் ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய ஒரே வீரர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி மீண்டும் பெற்றுள்ளார். முன்னதாக, 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் இதை அவர் செய்திருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளேயில் 31 விக்கெட்டுகள்
பவர்பிளேயில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஷாஹீன் அப்ரிடியின் இன்ஸ்விங் பந்துகள் எப்போதும் வலது கை பேட்டர்களுக்கு ஆபத்தாகவே இருந்து வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் 2018இல் அறிமுகமான ஷாஹீன் அப்ரிடி 41 ஒருநாள் போட்டிகளில் 5.38 என்ற எகானாமியில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த எண்ணிக்கையில் ஐந்து முறை நான்கு விக்கெட்டுகள் மற்றும் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், இதில் 31 விக்கெட்டுகள் பவர்பிளே ஓவர்களில் எடுக்கப்பட்டவையாகும். செப்டம்பர் 2018இல் ஷாஹீன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு வேறு எந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளரும் இவரை விட அதிக பவர்பிளே விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.