முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் நேரடி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்போர்ட்ஸ்18
முதன்முறையாக, ஸ்போர்ட்ஸ்18 வியாகாம் பிரத்தியேகமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு தொடருக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. ஐபிஎல் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை தன்வசம் வைத்திருந்தாலும், வியாகாம் நிறுவனம் இந்திய அணி போட்டியின் உரிமையை இதுவரை பெற முடியாத நிலை இருந்தது. இருப்பினும், ஃபேன் கோட் உடனான உரிம ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரை ஜியோ சினிமாவில் மட்டும் வழங்கி வந்தது. இந்நிலையில், தற்போது, ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்ளினில் தொடங்கும் இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான டி20 தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் பிசிசிஐ மற்றும் வியாகாம் இடையே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்11) கையெழுத்தாகி உள்ளது.
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா
ஆசிய கோப்பை 2023க்கு முன்னதாக டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுத்துள்ள நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒருவருடமாக ஓய்வில் இருந்த பும்ரா, அணிக்கு மீண்டும் திரும்பும்போது தனது முதல் தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பும்ராவின் பங்கு முக்கியம் என்பதால், அடுத்தடுத்து சில தொடர்களில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்துக்கு தொடருக்கான இந்திய அணி: ஜஸ்ப்ரீத் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்.