INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. முன்னதாக, செப்டம்பர் 19 அன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை வங்கதேசம் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தனர். வங்கதேச தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் முகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு சுருண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அபார பேட்டிங்
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் இந்தியா 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீச்சைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் வங்கதேசம் கடைசி இன்னிங்ஸில் 400+ இலக்கை 20 முறை எதிர்கொண்டு 19 முறை தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு முறை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.