INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : அஸ்வின்-ஜடேஜா ஜோடி இந்திய அணியை மீட்குமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது. முன்னதாக முதல் நாள் ஆட்டம் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்திய அணியினர் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில் வெறும் 109 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும், ஷுப்மன் கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், டோட் முர்பி 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
ஜடேஜாவின் அபார பந்துவீச்சு
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி வரும் நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 47 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் நாளை வியாழக்கிழமை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இதற்கிடையே முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஜடேஜா அசத்தியுள்ளார். முதல் நாள் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இருந்த நிலையில், இன்று இரண்டாம் நாளில், அவர்களின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அஸ்வின்-ஜடேஜா ஜோடி தனது சுழல் மேஜிக்கை நிகழ்த்தி ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை சரிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.