IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியாவுக்கு ராசியான இந்தூர் மைதானத்தில் வெல்லுமா?
மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 4 டெஸ்ட் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. மேலும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இதற்கிடையில், மூன்றாவது போட்டி முன்னர் ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் திட்டமிடப்பட்டு பின்னர், இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தூர் மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் செயல்திறன்
இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. 2016ல் நியூசிலாந்தை 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அதில் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். 2019ல் இந்தியா வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்ததோடு, முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கு 6 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 418 ரன்கள் எடுத்தது தான் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த போட்டியில் தான் சேவாக் 219 ரன்கள் எடுத்தார்.