இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு?
4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக, நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதே போல் மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி தயாராகி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா தொடரை குறைந்தபட்சம் 2-0 என்ற கணக்கில் வெல்லவேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காலை 9:30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
டெல்லி மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியம் நாக்பூரை போலவே சுழலுக்கு உகந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இதுவரை நடந்த 36 டெஸ்ட் போட்டிகளில், ஆறில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக 342 உள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்டில் கூட தோற்றதில்லை. இதற்கிடையே, முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புகிறார். இதனால் சூர்யகுமார் யாதவ் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஆஸ்திரேலிய அணியிலும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டிற்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும், மாட் ரென்ஷாவுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட்டும் களமிறங்க வாய்ப்புள்ளது.