இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், இந்தியாவின் அபார பந்துவீச்சால் மடமடவென சரிந்தது. சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வின், இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கடந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களின் சாதனைகள்
அஸ்வின் தனது முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார் 2011ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், இப்போது 450 விக்கெட்களை மிக வேகமாக கடந்த உலகின் இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். மேலும், அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 400 டெஸ்ட் விக்கெட்களைக் கடந்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் வரலாற்றில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆவார். காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்த ஜடேஜா, முதல் நாளிலேயே அபாரமாக விளையாடி 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.