IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா!
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்தியா தனது நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது. முதல் நாள் முடிவில் 77/1 என்ற நிலையில் இருந்து மீண்டும் இரண்டாவது நாளை தொடங்கிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 321/7 என்ற நிலைக்குச் சென்றது. கேப்டன் ரோகித் சர்மா (120) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அக்சர் படேல் (52*) மற்றும் ரவீந்திர ஜடேஜா (66*) நிலைத்து நின்று இந்திய அணியின் ஸ்கோரை வலுவாக்கினர். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்காக, அறிமுக வீரர் டோட் முர்பி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் போட்டியின் முக்கிய புள்ளி விபரங்கள்
கடைசியாக 2021 இல் டெஸ்ட் சதம் அடித்த ரோஹித், நாக்பூரில் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதல் நாள் முடிவில் 56 ரன்களில் இருந்து, இரண்டாவது நாளில் மீண்டும் தொடங்கிய ரோஹித், தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை எட்டினார். இதன் மூலம் கேப்டனாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த நான்காவது பேட்டர் ஆனார் ரோஹித். இதேபோல், முதல் நாளில் கேஎல் ராகுலை ஆட்டமிழக்கச் செய்த முர்பி, இன்று மேலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் என்ற சிறப்பை பெற்றார்.