Loading...
இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20: அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது யார்?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு.

இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20: அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது யார்?

எழுதியவர் Vasuki
Sep 12, 2026
01:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி புது தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு முதன்முறையாகத் தலைமை தாங்கவுள்ள நிலையில், முதல் டி20 ஆட்டத்தில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன் மற்றொரு தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள போதிலும், ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கே தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணிக்கு சவால்

காயத்திலிருந்து மீண்ட நட்சத்திரங்கள் மற்றும் ஆப்கன் சவால்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி, ஜிம்பாப்வே மண்ணில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி மீண்டெழுந்தது.

இருப்பினும் இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு முக்கிய சவாலாக அமையவுள்ளது.

இதனிடையே, காயம் காரணமாக விலகியிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பியிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்குப் பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் தேர்வு

சாம்சனை முந்துவாரா சூர்யவன்ஷி?

தொடக்க இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடி பின்னர் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறாத சஞ்சு சாம்சன் அணிக்குத் திரும்பியிருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷி சமீபத்திய ஆட்டங்களில் வெளிப்படுத்திய அசுர ஃபார்ம் அவருக்கு முன்னுரிமை பெற்றுத் தரும் வகையில் உள்ளது.

இதுவரை 6 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 189.21 ஸ்டிரைக் ரேட்டுடன் 2 அரைசதங்கள் உட்பட 193 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இதன் காரணமாக மூத்த பத்திரிகையாளர் வைபவ் போலா வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் டி20 ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவுடன் சூர்யவன்ஷியே களமிறங்குவார் என்றும், சாம்சன் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT