ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ள ஐசிசி
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலின் தேதி மற்றும் இடம் குறித்து அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது. லீக் சுற்றில் அக்டோபர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இதற்கிடையே நாக் அவுட் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டால், எங்கு போட்டி நடத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
அரையிறுதி போட்டிகள் குறித்து ஐசிசி விளக்கம்
மும்பையில் நவம்பர் 15 ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 மற்றும் நம்பர் 4க்கு இடையிலான அரையிறுதியும், கொல்கத்தாவில் நம்பர் 2 மற்றும் நம்பர் 3க்கு இடையிலான 2வது அரையிறுதியும் நடைபெறும். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால், குழு நிலை முடிவுகளை பொருட்படுத்தாமல் கொல்கத்தாவில் விளையாடும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அத்தகைய சூழலில் இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டியிருந்தால் அது கொல்கத்தாவிலும், இல்லையெனில் மும்பையிலும் நடக்கும் என மேலும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வந்தபோது, தர்மசாலாவில் விளையாட வேண்டிய போட்டி பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.