ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல்
பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா ஐசிசி தலைவராக வர வாய்ப்புள்ளது. பல அறிக்கைகளின்படி, அவர் கிரெக் பார்க்லேவுக்குப் பிறகு அந்த பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியில் உள்ளார். அவரது வேட்புமனுவுக்கு ஐசிசிக்கு ஒரு முன்மொழிபவர் மற்றும் அதை வழிமொழிபவர் தேவை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஜெய் ஷாவின் வேட்புமனுவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஐசிசி தலைவர் பதவிக்கான அவரது வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில், ஜெய் ஷா ஐசிசி தலைவரானால், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவரான ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளராகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மற்றவர்களை விட ஜெட்லி முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தலைவர் தேர்தல்
ஐசிசி விதிகளின்படி, தற்போதைய 16 ஐசிசி இயக்குநர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்க ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மூன்றாவது முறையாக பணியாற்ற தகுதியுடைய தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, மறுதேர்தலை நாடுவதில்லை என்ற தனது முடிவை அறிவித்தார். இதையடுத்து ஜெய் ஷாவிற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்தன. ஜெய் ஷா வெற்றி பெற்றால், 36 வயதில் ஐசிசி தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், ஜக்மோகன் டால்மியா, ஷரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோரைப் பின்பற்றி, கிரிக்கெட்டின் மதிப்புமிக்க ஐசிசி தலைவர் பதவியை வகித்த இந்தியர்களின் வரிசையில் இணைவார்.