SAvsSL : 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நான்காவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முன்னதாக, டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக், வான் டெர் டஸ்ஸன், ஐடென் மார்க்ரம் சதமடித்தனர். மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனை படைத்தது.
326 ரன்கள் குவித்த இலங்கை
429 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷங்க மற்றும் குஷால் பெரேரா சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் (76), சரித் அசலங்கா (79) மற்றும் தசுன் ஷனக (68) ரன்களும் எடுத்து கடைசி வரை வெற்றிக்காக போராடினர். எனினும், மற்ற வீரர்கள் யாரும் கைகொடுக்காத நிலையில், இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜெரால்டு காட்சீ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.குறைந்த பந்துகளில் சதமடித்த மார்க்ரம் ஆட்டநாயகன் விருது வென்றார்.