ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், டேவிட் மாலன் 14 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 33 ரன்களிலும் வெளியேறினர். அதன் பிறகு, ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ரன் குவித்தாலும், மறுபுறம் ஹாரி புரூக் மற்றும் மொயீன் அலி முறையே 25 மற்றும் 11 ரன்களில் அவுட்டாகினர்.
அணியை மீட்ட ஜோ ரூட் - ஜோஸ் பட்லர் ஜோடி
இதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் ஜோடி நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை சமாளித்து அணியை மீட்டனர். எனினும். ஜோஸ் பட்லர் 43 ரன்களில் அவுட்டாக, ஜோ ரூட்டும் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய நிலையில், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 283 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.