Loading...
சுப்மன் கில்லின் கோரிக்கை நிராகரிப்பு: எச்சில் தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை என ஐசிசி அறிவிப்பு
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க முடியாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

சுப்மன் கில்லின் கோரிக்கை நிராகரிப்பு: எச்சில் தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை என ஐசிசி அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
05:13 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தைப் பளபளப்பாக்க வீரர்கள் எச்சிலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீரர்கள் மற்றும் நடுவர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 2022-ஆம் ஆண்டு இந்தத் தடையை நிரந்தரமாக்கி ஐசிசி விதிமுறைகளைக் கடுமையாக்கிய நிலையில், தற்போது வரை அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் கோரிக்கை

நியூசிலாந்து டெஸ்ட் டிராவுக்குப் பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் வைத்த கோரிக்கை

முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், எச்சில் பயன்படுத்துவதற்கான தடையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் குக்கபுரா பந்து 25 முதல் 30 ஓவர்களுக்குள்ளாகவே மென்மையாக மாறிவிடுவதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் அனுமதி 

சர்வதேச கிரிக்கெட்டில் தடை தொடரும்

இந்திய கேப்டன் கில்லின் கோரிக்கைக்கு உடனடியாகச் செவிசாய்க்கும் எண்ணத்தில் ஐசிசி இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்தின் தன்மையைச் செயற்கையாக மாற்றும் செயல்களுடன் எச்சில் பயன்படுத்துவதையும் ஒப்பிட்டு, தற்போதைய விதிமுறையையே தொடர்ந்து செயல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு எச்சில் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அந்த மாற்றத்தை அமல்படுத்த ஐசிசி விரும்பவில்லை.

இதனால், சர்வதேசப் போட்டிகளில் பந்தைப் பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்துவதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT