ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நெதர்லாந்து
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூத்த வீரர்களான ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் கொலின் அக்கர்மன் ஆகியோர் இந்த தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி இதிலும் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதுபோல், வரவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் பெரிய அணிகளை வீழ்த்தும் நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
உலகக்கோப்பைக்கான நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் பெங்களூருக்கு வந்து பயிற்சி முகாமில் பங்குபெற உள்ளார்கள். கர்நாடகாவுக்கு எதிராக மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளதோடு, செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், அக்டோபர் 3ஆம் தேதி இந்தியாவிற்கு எதிராகவும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளார்கள். 2023 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.