
2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
செய்தி முன்னோட்டம்
ஐசிசி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான விரிவான அட்டவணையை புதன்கிழமை (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.
முன்னதாக 2021-23 சுழற்சியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்த நிலையில், இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுழற்சி தொடங்க உள்ளது.
இந்த 2023-25 சுழற்சி ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடருடன் தொடங்குகிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2025 இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் சுழற்சியில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு ஆண்டுகளில் 27 தொடர்களில் 68 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்கும்.
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதில் பங்கேற்கின்றன.
india plays 19 matches
19 போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி
2023-25 சுழற்சியில் இந்தியா 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீசில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்சி தொடங்க உள்ளது.
இதன் பின்னர் டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 இல் தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024 இல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடரிலும் விளையாட உள்ளது.
பின்னர் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக முறையே இரண்டு மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடர்களில் விளையாட உள்ளது.
இதைத் தொடர்ந்து கடைசி தொடர் 2024 ஆம் ஆண்டு அக்டோபர்/நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் நடக்க உள்ளது.