ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்
பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையேயான போட்டி பற்றிய சுவாரஷ்ய சம்பவத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தின் 12வது ஆண்டு நிறைவை மார்ச் 16 அன்று கொண்டாடும் சச்சின், தனது விளையாடும் நாட்களில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக கடுமையான போட்டியைக் கொண்டிருந்தார். 1997 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் கனடாவில் சஹாரா கோப்பையில் மோதியபோது சச்சினுக்கு எதிராக தான் ஸ்லெட்ஜிங் செய்தபோது, அவர் எதிர்கொண்ட விதத்தை தெரிவித்தார். முஷ்டாக் சச்சினிடம் சென்று சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை ஸ்லெட்ஜிங் செய்தாலும், இதை தன்னிடம் எதிர்பார்க்கவில்லை என முஷ்டாக் தெரிவித்தார்.
கனடாவில் நடந்தது என்ன? மனம் திறந்த சக்லைன் முஷ்டாக்
நாதிர் அலி போட்காஸ்டில் பேசிய முஷ்டாக் பேசியது பின்வருமாறு :- கனடாவில் நடந்த சஹாரா கோப்பையின்போது சச்சினுடன் ஒரு சம்பவம் நடந்தது. நான் அப்போது இளம் வீரர். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிவிட்டு அங்கு வந்திருந்தேன். சச்சினை தொடக்கத்தில் ஸ்லெட்ஜிங் செய்தேன். அப்போது என்னிடம் வந்த சச்சின், சகி நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. நீங்கள் மிகவும் ஒழுக்கமான நபர் என்று நான் நினைத்தேன் என்று கூறினார். இதனால் நான் மனம் உடைந்து போனேன். ஆனால் கிரிக்கெட்டில் இது ஒரு மைண்ட் கேம். அவர் என்னை வார்த்தையால் வீழ்த்திவிட்டார் என்பதை பிறகு தான் உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.