"இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன்" : டெஸ்ட் கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா பளீச்
தனது கேப்டன்சி குறித்து மதிப்பிடுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இன்னும் கேப்டனாக கற்றுக்கொண்டு தான் உள்ளேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். முழு நேர டெஸ்ட் கேப்டனாக 2022ல் 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கினார். எனினும் அவரால் அடுத்தடுத்து பல போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த முடியாமலேயே 2022 முடிந்தது. இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்கு டெஸ்ட்களில் இந்தியாவை வழிநடத்திய ரோஹித் 2-1 என வென்றார். இது வரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள ரோஹித் 4 வெற்றிகளும், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பெற்றுள்ளார்.
கேப்டன்சி குறித்த கேள்விக்கு ரோஹித் சர்மாவின் பதில்
செய்தியாளர்களின் கேள்விக்கு ரோஹித் அளித்த பதில் பின்வருமாறு :- நான் கேப்டனாக இருந்த ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் இன்னும் கேப்டனாக கற்றுக் கொண்டிருக்கிறேன். மற்ற வடிவங்களை விட டி20 கிரிக்கெட்டில் நிறைய முறை கேப்டனாக இருந்தேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஆறு போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளதால் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் இந்தியாவில் சிவப்பு-பந்து கிரிக்கெட் விளையாடவில்லை என்பதல்ல, அது எப்படி வேலை செய்கிறது என்பதை நான் அறிவேன். எனவே நான் ஒரு குழுவாக அனைத்து விஷயங்களையும் சிந்திக்க முயற்சிக்கிறேன். நான் அணியை வழிநடத்தும் போதெல்லாம், எளிமையாக வைத்திருக்க முயற்சிப்பேன். முற்றிலும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய முயற்சிக்காமல் இருப்பதில் எப்போதும் என் கவனம் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை மிக அவசியம்.