ஜாம்பவான் தயான் சந்தின் சாதனையை சமன் செய்தார் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்
வியாழக்கிழமை (செப்டம்பர் 12) சீனாவின் ஹுலுன்பியரில் உள்ள மோகி ஹாக்கி பயிற்சித் தளத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஹாக்கிப் போட்டியின் நான்காவது குரூப் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இந்திய ஹாக்கி அணிக்காக கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் (9', 43') இரண்டு கோல்கள் அடித்த நிலையில், ஆரைஜீத் சிங் ஹண்டாலும் (8') ஒரு கோல் அடித்தார். மறுபுறம் தென் கொரியாவுக்கு ஜிஹுன் யாங் (30') ஒரே ஒரு கோல் அடித்தார். இதற்கிடையே, நடப்பு சாம்பியனான இந்தியா இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கடைசி போட்டி
இந்திய அணி செப்டம்பர் 16 அன்று தனது கடைசி குரூப் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கிடையே, தென்கொரியாவுக்கு எதிரான இந்த போட்டியில் தனது முதல் கோலை அடித்ததன் மூலம், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்காக 200வது கோல் அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ஜாம்பவான்களான மேஜர் தயான் சந்த் மற்றும் பல்பீர் சிங் தோசன்ஜ் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், இந்த இலக்கை எட்டிய மூன்றாவது இந்திய ஹாக்கி வீரர் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் சிங் பெற்றார். நடப்பு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் இதுவரை மொத்தம் 3 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.