உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்
ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது. இந்தியா ஹாக்கி அணிக்கான தேர்வு, இரண்டு நாளாக, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பெங்களூரு மையத்தில் நடைபெற்றது. நேற்று வெளியிடப்பட்ட தேர்வின் முடிவுகளின் படி, இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக, அமித் ரோஹிதாஸ் இருப்பார். கோல்கீப்பர்களாக, பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணா பதக் ஆகியோர் தேர்தெடுக்க பட்டுள்ளனர்.
உலக கோப்பை ஹாக்கி
அணித் தேர்வு குறித்து தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், "நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக ஹோம் ப்ரோ லீக் தொடர் மற்றும் உலகின் நம்பர் 1 அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கடினமான சுற்றுப்பயணம் உட்பட ஒரு சிறந்த கள பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் ஒடிசாவுக்குச் சென்று எங்களின் வீரர்களுக்கு, இறுதி கட்ட பயிற்சியினை பெற ஆவலுடன் காத்திருக்கிறோம்" . இந்தியா, டி பிரிவில், இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தொடக்க ஆட்டம், ஸ்பெயினுக்கு எதிராக, ஜனவரி 13 அன்று ரூர்கேலாவில் உள்ள, பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த தொடரின், இறுதிப் போட்டி ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும்.