ஹர்மன்ப்ரீத் செயலால் கோபம்; போட்டோஷூட்டில் பாதியிலேயே வெளியேறிய வங்கதேச மகளிர் அணி
இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை (ஜூலை 22) மிகவும் குழப்பமான முறையில் முடிந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனக்கு அவுட் வழங்கியது தவறு என நடுவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஸ்டம்பை அடித்து நொறுக்கினார். போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சி நிகழ்விலும் நடுவர்களை மோசமாகப் பேசியதன் மூலமும் ஹர்மன்ப்ரீத் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், இரு அணி வீராங்கனைகளின் புகைப்படத்தில், வங்கதேச அணிக்காக செயல்பட்ட நடுவர்களையும் அழையுங்கள் என ஹர்மன்ப்ரீத் கூறியதாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தங்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளதாக கருதிய வங்கதேச அணி, புகைப்படம் எடுக்கும்போது பாதியிலேயே வெளியேறினர்.
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விளக்கம்
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா, "இது முழுக்க முழுக்க அவரது பிரச்சனை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறினார். எனினும், "என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஒரு வீராங்கனையாக, அவர் இன்னும் சிறந்த நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம். எனது குழுவுடன் புகைப்படத்திற்காக இருக்கும்போது சூழல் சரியாக இல்லாததால், நாங்கள் திரும்பிச் சென்றோம்." என்றார். இதற்கிடையே, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், நடுவர்களை குறித்து பேசியதை உறுதிப்படுத்தினார். எனினும், வங்கதேச கேப்டனை நோக்கி அவர் எதுவும் சொல்லவில்லை என விளக்கியுள்ளார்.