மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை
ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2024 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) கிரிக்கெட்டில் விளையாட இந்திய வீராங்கனைகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எந்த அணியாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னதாக WBBL'இல் சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், இந்த ஆண்டு வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்ட 19 இந்திய வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். ஆனால் அவரை யாரும் எடுக்கவில்லை. அதேநேரம், WBBL'இன் முந்தைய சீசனில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், 2021இல் இந்த தொடரில் ப்ளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதையும் கவுர் பெற்றுள்ளார்.
WBBL 2024'இல் அதிக இந்திய வீராங்கனைகள்
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை ஆறு இந்திய வீராங்கனைகள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் 2024 WBBL சீசனுக்காக மெல்போர்ன் ஸ்டார்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோரை பிரிஸ்பேன் ஹீட் எடுத்துள்ளது. இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல் ஹேமலதா தயாளனை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. 2024 WBBL மகளிர் டி20 உலகக் கோப்பை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அக்டோபர் 27 அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய மகளிர் அணி தற்போது உலகக்கோப்பைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது.