ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை 2023 தொடரின்போது அக்சர் படேல் காயமடைந்த நிலையில், அதில் மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். மேலும், ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான அணியில் மூத்த வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாஹலுக்கு வாய்ப்பளிக்காத முடிவைக் கண்டு ஆச்சரியமடைந்த ஹர்பஜன், ஒருவேளை அவர் யாரிடமாவது சண்டையிட்டிருந்தால் வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறினார்.
யுஸ்வேந்திர சாஹலை சேர்க்காதது குறித்து ஹர்பஜன் சிங் விரக்தி
ஹர்பஜன் சிங் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பேசியபோது, "யுஸ்வேந்திர சாஹலுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. அவர் யாரிடமாவது சண்டையிட்டாரா அல்லது யாரிடமாவது ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் திறமை பற்றி மட்டுமே பேசினால், இந்த அணியில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் அணியின் அசல் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் ஹர்பஜன் சுட்டிக்காட்டினார். மேலும், அணி நிர்வாகம் ஒரு ஆஃப் ஸ்பின்னரைத் தேடுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுவதாக கூறிய ஹர்பஜன், அணி நிர்வாகம் முந்தைய தவறை சரிசெய்ய மற்றொரு தவறைச் செய்ய உள்ளதுபோல் இருப்பதாக கூறினார்.