ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் நீக்கம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மெக்ஸ்வெல்லுக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 30) கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிளப் ஹவுஸிலிருந்து அணி பேருந்திற்குச் செல்லும் போது கோல்ஃப் வண்டியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், இதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும், கிளென் மேக்ஸ்வெலுக்கு சில லேசான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல் இலலாதது அணிக்கு பின்னடைவு
மேக்ஸ்வெல் இல்லாதது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அவர் புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வரலாற்று சதத்தை அடித்தார். அதைத் தொடர்ந்து தரம்சாலாவில் உள்ள எச்பிசிஏ ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், சனிக்கிழமையன்று (நவம்பர் 4) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியா லீக் கட்டத்தின் மீதமுள்ள ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.