ஐபிஎல் 2024: க்ளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி லெவன் அணியில் இருந்து விலகினார்
ஐபிஎல் 2024இல் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்த பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லெவன் அணியில் தனக்கு பதிலாக மற்றொரு வீரரை களமிறக்க வேண்டும் என கிளென் மேக்ஸ்வெல் தானாக முன்வந்து கேட்டுக்கொண்டுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. பலரும் முந்தைய போட்டிகளில் அவரது ஃபார்ம் காரணமாக தேர்வு செய்யவில்லை என்று கருதிய வேளையில், மேக்ஸ்வெல் தானே கேப்டன் டுபிளெசியிடம் போய் தனக்கு பிரேக் வேண்டுமெனவும், தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர இதுவே சிறந்த தருணம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் 32 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார்.
மேக்ஸ்வெல் கூறியது என்ன?
நேற்றைய போட்டியில் RCB அணிக்கு ஏற்பட்ட 6-வது தோல்விக்குப் பிறகு மேக்ஸ்வெல் கூறியது:"எனக்கு கடந்த காலத்திலும் இப்படி நடந்துள்ளது. ஆடிக் கொண்டேயிருப்பேன்...திடீரென ஏதோவொரு மனத்தடை ஏற்படும். எனவே, எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இடைவேளை தேவை என்பதை உணர்ந்தேன்". "மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல்/மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன். எங்கள் அணியில் பவர் ப்ளேவுக்குப் பிறகே பெரிய குறைபாடு உள்ளது. அங்கு வந்து ஆடுவதுதான் என் பலம்". "ஆனால், பேட்டிங்கில் நான் நம்பிக்கையளிக்கும் பங்களிப்புகளைச் செய்யவில்லை. 7 போட்டிகளில் 6 தோல்வி ஏற்பட்ட நிலையில் எனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பளிப்பதுதான் சிறந்தது என்று கருதுகிறேன்" என்றார். மேக்ஸ்வெல் இப்படி விலகுவது முதன்முறையன்று.