இவ்ளோ நெருக்கமா இருந்தவங்களா கோலி-கம்பீர்? வைரலாகும் பழைய காணொளி!
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (மே 1) லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஐபிஎல் 2023 ஆட்டத்திற்குப் பிறகு விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கோலி மற்றும் கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும், நவீன்-உல்-ஹக்கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், இருவரின் உறவு ஆரம்பத்தில் மோசமாக இல்லை.
கோலி இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியபோது, கம்பீர் அவருக்கு ஆதரவாக இருந்து நல்லுறவை கொண்டிருந்தனர்.
இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நெருக்கம் இயல்பாகவே இருந்தது.
gambhir dedicates man of the match to kohli
ஆட்டநாயகன் விருதை கோலிக்கு வழங்கிய கம்பீர்
2009 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கம்பீர் (150 நாட் அவுட்) மற்றும் கோலியின் (107) சதங்கள் அணியின் வெற்றிக்கு காரணமானது.
இந்த போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் 150 ரன்கள் குவித்த கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட நிலையில், தனது முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதை வழங்குமாறு கம்பீர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள் ஏன் இப்போது கடுமையாக மோதிக் கொள்கிறார்கள் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.