ஃபிரஞ்சு ஓபன் 2023 : அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் - கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை!
2023 ரோலண்ட் கரோஸ் ஃபிரஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ், 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். முன்னதாக கார்லோஸ் அல்கராஸ் காலிறுதியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி தனது முதல் ரோலண்ட் கரோஸ் அரையிறுதியை எட்டினார். மறுபுறம் ஜோகோவிச் கரேன் கச்சனோவை வீழ்த்தி தனது 12வது ஃபிரஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார். அல்கராஸ் மற்றும் ஜோகோவிச் ஆகிய இருவரும் ஏடிபி டூர் போட்டிகளில் இதுவரை ஒருமுறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2022 மாட்ரிட் மாஸ்டர்ஸ் அரையிறுதி போட்டியில் இருவரும் மோதியலில், அல்கராஸ் 6-7(5), 7-5, 7-6(5) என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அந்த போட்டியின் காலிறுதியில் அல்கராஸ் ரஃபேல் நடாலையும் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
அல்கராஸின் அரையிறுதிக்கான பாதை
அல்கராஸ் தனது 2023 ஃபிரஞ்சு ஓபன் போட்டியை ஃபிளேவியோ கோபோலிக்கு எதிரான நேர் செட் வெற்றியுடன் தொடங்கினார். டாரோ டேனியலுக்கு எதிரான இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 6-1, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனினும் இதில் ஒரு செட்டை இழந்தார். அல்காரஸை போலவே, ஜோகோவிச்சும் இதுவரை 2023 பிரெஞ்சு ஓபனில் ஒரு தனி செட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அல்கராஸ் பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றில் முறையே டெனிஸ் ஷபோவலோவ் மற்றும் லோரென்சோ முசெட்டிக்கு எதிராக நேர் செட் வெற்றிகளைப் பதிவு செய்தார். சிட்சிபாஸுக்கு எதிரான அபார வெற்றி அல்கராஸுக்கு அவரது முதல் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி வாய்ப்பைக் கொடுத்தது.