இந்தியா-பாக் போட்டியை ஒட்டி, அகமதாபாத்தில் ஹோட்டல் அறை வாடகை கட்டணம் 10 மடங்கு உயர்வு
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான போட்டி அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அறிவித்த பிறகு, அக்டோபர் 15 ஆம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் அகமதாபாத்தில் மோதும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், போட்டி நடக்கும் நாட்களை ஒட்டிய சமயங்களில் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் அறைகளின் விலை ஏறக்குறைய பத்து மடங்கு உயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு ஹோட்டல் முன்பதிவு இணையதளங்களில் உள்ள விலைகள் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், அங்குள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பரம எதிரிகள் விளையாடும் போட்டியை முன்னிட்டு அதிக தேவை காரணமாக விலை உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக சில ஹோட்டல்கள் கிட்டத்தட்ட ₹1 லட்சத்தை வசூலிக்கும் சூழலிலும், பல ஹோட்டல் அறைகள் ஏற்கனவே அக்டோபர் 15க்கு விற்றுத் தீர்ந்துவிட்டன.
அகமதாபாத் சொகுசு ஹோட்டல்களில் அறை வாடகை
சாதாரண நாட்களில், அகமதாபாத்தில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அறை வாடகை ₹5,000 முதல் ₹8,000 வரை இருக்கும். அக்டோபர் 15ம் தேதிக்கு மட்டும் குறைந்தபட்சம் ₹40,000 ஆகவும், சில இடங்களில் ₹1 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஹோட்டல் முன்பதிவு போர்டல் 'booking.com' இன் படி, ஜூலை 2ஆம் தேதிக்கான டீலக்ஸ் அறை ஒன்றின் வாடகை ₹ 5,699 ஆகும். ஆனால், அக்டோபர் 15 அன்று ஒரு நாள் தங்க விரும்பினால் ₹ 71,999 வசூலிக்கப்படும் எனக் காட்டுகிறது. குஜராத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இதர இந்திய மாநிலங்களை சேர்ந்த மேல் நடுத்தர வர்க்க கிரிக்கெட் ரசிகர்களின் தேவைக்கேற்ப ஹோட்டல்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.