ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி
தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அதற்காக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) நடைபெற்ற யோ-யோ தேர்வில் பங்கேற்றதோடு, அதில் 17.2 புள்ளிகளை பெற்று தேர்ச்சி பெற்றார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், "பயங்கரமான கூம்புகளுக்கு இடையில் யோ-யோ பரிசோதனையை முடித்ததில் மகிழ்ச்சி, 17.2 எடுத்தேன்." என்று தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
யோ-யோ தேர்வு என்பது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு யோ-யோ தேர்வு கட்டாயமாகும். மேலும் பிசிசிஐ இந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 16.5 புள்ளிகளை குறைந்தபட்சமாக நிர்ணயித்துள்ளது. யோ-யோ டெஸ்ட் என்பது 2 கிமீ தூர சுற்று பாதையாகும், இது வீரர்களின் வேகம் மற்றும் சகிப்புத்தன்மையை சோதிக்க மேற்கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளாக பிசிசிஐ இந்த சோதனையை வீரர்களின் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல்களில் ஒன்றாக கடைபிடித்து வருகிறது. யோ-யோ டெஸ்ட் தரவரிசையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலியும் ஒருவர் ஆவார். கோலி தவிர ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சிலரும் இந்த சோதனையில் பங்கேற்க உள்ளனர்.