FIFA உலகக்கோப்பை: இந்தியாவில் இன்னும் ஒரு டிவி-யில் கூட ஒளிபரப்பு ஒப்பந்தம் ஆகலையா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா ஜூன் 12-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் அதனை எந்த தொலைக்காட்சியில் அல்லது ஓடிடி தளத்தில் பார்ப்பது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), பிஃபா உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமத்தைப் பெறுவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வழக்கு
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு
பிஃபா உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் மற்றும் DD Sports போன்ற பொதுத்துறை இலவச அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அவ்தேஷ் பைர்வா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முக்கியமாகத் தொடக்க ஆட்டம், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசார் பாரதி தரப்பில், "பிஃபா உலகக்கோப்பை போன்ற வணிகரீதியான விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்குவது தங்களது பொது சேவை கடமைகளுக்குள் வராது என்றும், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல" என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
முட்டுக்கட்டை
ஒளிபரப்பு முட்டுக்கட்டைக்கு என்ன காரணம்?
கடந்த 2022 கத்தார் உலகக்கோப்பையின் போது இந்திய ரசிகர்களிடம் இருந்து சுமார் 74.5 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகள் கிடைத்தன. இவ்வளவு பெரிய சந்தை இருந்தும், இதுவரை இந்தியாவில் எந்த ஒரு முன்னணி நிறுவனமும் ஒளிபரப்பு உரிமத்தை வாங்க முன்வராததற்கு காரணங்கள்: வட அமெரிக்காவில் போட்டிகள் நடப்பதால், இந்திய நேரப்படி நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில்தான் பெரும்பாலான போட்டிகள் ஒளிபரப்பாகும். இதனால் தொலைக்காட்சி விளம்பர வருவாய் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. 2026 மற்றும் 2030 உலகக்கோப்பை போட்டிகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமத்தை பிஃபா நிறுவனம் 100 மில்லியன் டாலராக நிர்ணயித்தது. இந்திய ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளதால், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்யத் தயங்குகின்றன.