CSKvsGT: மைதானத்தில் திருடிய சிஎஸ்கே ரசிகர் மீது தாக்குதலா? வைரலாகும் வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மை
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில், எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ மிகவும் வேகமாகப் பரவியது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த ஒரு நபர், மைதானத்திற்குள் ரசிகர்களின் பணப்பையைத் (Wallet) திருடியபோது பிடிபட்டதாகவும், இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்துத் தாக்கியதாகவும் கூறி அந்த வீடியோ பகிரப்பட்டது. ஆனால், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று ஏபிபி லைவ் வெளியிட்டுள்ள உண்மை சரிபார்ப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி
அதிக பார்வைகளைப் பெற பரப்பப்பட்ட போலி விவரம்
வைரலான அந்த வீடியோவில், மைதானத்தின் நடைபாதை போன்ற ஒரு கூட்ட நெரிசலான பகுதியில் ஒரு நபரைச் சுற்றி இருக்கும் பொதுமக்கள் கோபமாகத் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மைதானத்தின் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் அந்த நபரின் திருட்டு நடவடிவக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே அவர் பிடிபட்டார் என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. மேலும், காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே பொதுமக்கள் அந்த நபரைத் தண்டித்ததாகவும் ஒரு கற்பனையான கதை இதனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. ஏபிபி லைவ் அறிக்கையின்படி, போட்டியின் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி தங்களின் கணக்கிற்கு அதிக லைக்குகள் மற்றும் பார்வைகளைப் பெறவே இந்தத் தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது.
அகமதாபாத் மைதான பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம்
வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்
இது குறித்து அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் பாதுகாப்பு மேலாண்மை அதிகாரிகள் தங்களின் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளனர். போட்டியின் போது மைதானத்தின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற பொதுமக்களின் வன்முறைச் சம்பவங்களோ அல்லது திருட்டுப் புகார்களோ எழவில்லை என்று அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய வதந்திகள் விளையாட்டுப் போட்டிகளின் போது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பதால், விளையாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.