
எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.
ஜியோ சினிமாவில் நடந்த ஒரு உரையாடலில் பங்கேற்று பேசிய சபா கரீம், ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட எம்எஸ் தோனியை பார்த்து தான் மிகவும் ஈர்க்கப்பட்டு, பாகிஸ்தான் தொடரில் அவரை சேர்க்க வேண்டும் என சவுரவ் கங்குலியிடம் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், அப்போது கங்குலி தோனியின் ஆட்டத்தை பார்த்ததில்லை என்பதாலும், தொடருக்கு இடையில் குறுகிய காலமே இருந்ததாலும், வாய்ப்பு வழங்கவில்லை.
எனினும், அதன் பின்னர் 2004இல் நடந்த வங்கதேச தொடரில் எம்எஸ் தோனி இந்திய அணியில் அறிமுகமானார்.
dhoni lags in wicket keeping in initial stage
தோனியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம்
ரஞ்சி கோப்பையில் தோனி பேட்டிங் செய்வதையும், விக்கெட் கீப்பிங் செய்வதையும் பார்த்த சபா கரீம், பேட்டிங்கில் அவரது புத்திசாலித்தனத்தை கண்டு வியந்துள்ளார்.
பேட்டிங்கில் சுழற்பந்து, வேகப்பந்து என அனைத்தையும் திறமையாக கையாண்டாலும், விக்கெட் கீப்பிங்கில் அப்போது தோனி சில குறைகளை கொண்டிருந்ததாகவும், அதை மேம்படுத்த அவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் சபா கரீம் கூறினார்.
மேலும், அப்போது அவருக்குக் கற்றுக் கொடுத்ததை அவர் இன்னும் நினைவில் வைத்திருப்பதில்தான் எம்எஸ் தோனியின் மகத்துவம் உள்ளது என்றும் அவரை சந்திக்கும்போதெல்லாம் இது குறித்து அவர் நினைவுகூர்வார் என்றும் தெரிவித்தார்.
ஒரு நாள் போட்டிகளில், அவரது பேட்டிங் மிகவும் வலுவாக இருந்ததாலும், அவர் விரைவாக ரன்களை எடுப்பதாலும், அவரை அணியில் சேர்க்கத் தொடங்கினோம் என்று கூறினார்.