உலகக்கோப்பையில் விராட் கோலியை பலிகடாவாக்கும் முயற்சி; ரவி சாஸ்திரியின் யோசனைக்கு எதிர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை நம்பர் 4 இடத்தில் இறக்கலாம் என ஆலோசனை வழங்கிய ரவி சாஸ்திரியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்திய அணியில் நீண்ட காலமாக நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரர் அமையவில்லை. சமீபத்தில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இதை வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில், ரவி சாஸ்திரி, 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் இதே சிக்கல் நிலவியதாக தெரிவித்தார். அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த தான், விராட் கோலியை நம்பர் 4 இடத்தில் களமிறக்குவது குறித்து அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் நீண்ட ஆலோசனை நடத்தியதாகவும், இறுதியில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சச்சினின் நிலையை ஒப்பிட்டு முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி இந்த யோசனையை தெரிவிக்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி அதை வரவேற்றார். ஆனால், அங்கு உடன் இருந்த சஞ்சய் மஞ்ரேகர் இதை நிராகரித்து, விராட் கோலியை இந்த திட்டம் பலிக்கடாவாக்கும் என்றார். மேலும், 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கரை நம்பர் 4 இடத்தில் களமிறக்கியது மிகமோசமான முடிவை கொடுத்ததை நினைவுகூர்ந்தார். அந்த தொடரில் இந்திய அணியில் பல வலிமையான வீரர்கள் இருந்தும், மிக மோசமாக தோற்று வெளியேறியது. மற்றொரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தோட்டா கணேஷும் தனது எக்ஸ் பதிவில், 2007 சச்சினின் நிலையை ஒப்பிட்டு, இந்த விபரீத முயற்சி வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.