Loading...
இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி வழங்க பாகிஸ்தான் பிரதமருக்கு 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம்
21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு கூட்டு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்

இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி வழங்க பாகிஸ்தான் பிரதமருக்கு 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
08:03 am

செய்தி முன்னோட்டம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையிலும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க கோரி இந்திய ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு கூட்டு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 14 முன்னாள் கேப்டன்கள் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, தற்போது மேலும் 7 கேப்டன்கள் இணைந்து இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கானின் சொந்த மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரி அடங்கிய மருத்துவக் குழுவால் அவர் முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும், குடும்பச் சந்திப்புகள் தடங்கலின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

3 முக்கியக் கோரிக்கைகள்

மருத்துவக் குழுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இம்ரான் கான், சில மணி நேரங்களிலேயே அரசு நியமித்த மருத்துவக் குழுவால் "உடல்நலம் சீராக உள்ளது" எனக் கூறப்பட்டு மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கேப்டன்கள் தங்கள் கடிதத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி சுயாதீன மருத்துவக் குழு முழுமையான பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாராந்திர குடும்பச் சந்திப்புகளைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும்

மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளின்படி பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.

சிறைவாசம்

3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்..

73 வயதான இம்ரான் கான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார்.

தாங்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் தலையிடவில்லை என்றும், விளையாட்டின் மூலம் உருவான நட்பின் அடிப்படையில் அடிப்படை மனிதநேயத்தை மட்டுமே வலியுறுத்துவதாகவும் கேப்டன்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இக்கடிதத்தில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், இங்கிலாந்தின் ஹுசைன், அலஸ்டேர் குக், மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாயிட், இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா உள்ளிட்ட பல முக்கியச் சர்வதேச கேப்டன்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ADVERTISEMENT