நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். 25 வயதான டங்கு, இந்த கோடையில் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பின்னர், ஒயிட் பால் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்நிலையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில், டங்குக்கு பதிலாக டி20இல் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இருந்து விலகியதோடு, சனிக்கிழமையன்று சதர்ன் பிரேவுக்கு எதிரான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸின் தி ஹன்ட்ரட் எலிமினேட்டரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்
நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30, 2023 அன்று தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1, 3 மற்றும் 5 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்பட உள்ளார். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர், ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், லூக் வுட், ஜான் டர்னர், கிறிஸ் ஜோர்டான்.