
என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் போட்டிகளில் தன்னால் ரன்களை எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2023 முதல், 13 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் இன்னும் 50 ரன்களைக் கடக்கவில்லை.
மேலும் கடைசி 8 இன்னிங்ஸில், பட்லரின் ரன் சராசரி 9.75 மட்டுமே. மேலும், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் அவர் ரன் எடுக்க போராடினார்.
தவிர, ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சோபிக்கவில்லை.
அந்த போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்திருந்தபோதும், பட்லர் 13 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
Jos Butler feels bad about his poor performance in ODI
மோசமான செயல்திறன் குறித்து மனம் நொந்த ஜோஸ் பட்லர்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது மோசமான ஃபார்மைப் பற்றித் திறந்து பேசிய இங்கிலாந்து கேப்டன் இது தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் பந்தை எப்போதும் நன்றாகவே அடிப்பதாகவும், ஆனால் ரன்களை எடுக்கத் தொடங்கும் சிறிது நேரத்தில் அவுட்டாகி விடுவதாக சுட்டிக்காட்டினார்.
எனினும், விரைவில் மீண்டும் தனது முழு ஃபார்மிற்கு திரும்புவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் சபதம் செய்துள்ளார்.
இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தும்கூட, வெஸ்ட் இண்டீஸ் அணி சாய் ஹோப்பின் சதம் மூலம் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.