கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 61 வயதான முன்னாள் எம்பி முகமது அசாருதீன் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை முன் ஆஜராகி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும், முகமது அசாருதீன் அமலாக்கத்துறையிடம் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கு தொடர்பான விபரங்கள்
முகமது அசாருதீனுக்கு எதிரான வழக்கு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பானது. அமலாக்கத்துறை நவம்பர் 2023இல் இதுதொடர்பாக சோதனைகளை நடத்தியது. தகவலறிந்த வட்டாரங்களின்படி, அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த காலத்தில் அவர் வகித்த பங்கு அமலாக்கத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது. பணமோசடி வழக்கு, கிரிக்கெட் சங்க நிதி ரூ.20 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த மூன்று எஃப்ஐஆர்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகளில் இருந்து அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முகமது அசாருதீன் காலத்தில் இருந்த செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.