இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11'
பேன்டஸி கேமிங் தளமான ட்ரீம் 11 அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்திருக்கிறது . இதற்காக நடைபெற்ற ஏலத்தில் வெற்றிபெற்று பைஜூஸ் நிறுவனத்துக்குப் பதிலாக, புதிய ஸ்பான்சராகியிருக்கிறது ட்ரீம் 11. எனினும், எவ்வளவு தொகைக்கு இந்த ஏலத்தை ட்ரீம் 11 வென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. புதிய ஸ்பான்சராக ட்ரீம் 11 தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ அமைப்பின் தலைவரான ரோஜர் பின்னி. "இந்தாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில், பார்வையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். அதனை இந்த பிசிசிஐ-ட்ரீம் 11 கூட்டணி மிகவும் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார் ரோஜர் பின்னி.
எப்போது இருந்து தொடக்கம்?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-க்கான சுழற்சியின் முதல் தொடரில் வெஸ்ட் இன்டீஸ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தத் தொடரில் இருந்தே இந்திய அணி வீரர்களின் ஜெர்ஸியில் ட்ரீம் 11-ன் பெயர் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி தொடர்களில் வீரர்களின் ஜெர்சியின் நடுவில் குறிப்பிட்ட நாட்டின் பெயர் இடம்பெறும். எனவே, ஐசிசி தொடர்களில் ஸ்பான்சராவதற்கு வழங்கப்படும் தொகையை விட, இருநாட்டுத் தொடர்களில் முன்னணி ஸ்பான்சராக இருப்பதற்கு வழங்கப்படும் தொகை மூன்று மடங்கு அதிகமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் துணை-நிறுவனரும், சிஇஓவுமான ஹர்ஷ் ஜெயின், இந்திய விளையாட்டு சுற்றுச்சூழலில் தொடர்ந்து பங்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.